புள்ளிக் கோழி

புள்ளிக் கோழி எங்கள் கோழி
பொரித்த குஞ்சு பத்து
வெள்ளைக் குஞ்சு மூன்று நல்ல
வெடிவால் குஞ்சு ஏழு

கொக்கொக் கொக்கோ என்று குஞ்சைக்
கூட்டிக் கொண்டு திரியும்
பக்கத் திலே காகம் வந்தால்
பறந்து பறந்து கலைக்கும்

தம்பிக் குஞ்சு சத்தம் போட்டால்
தலையைத் தூக்கிப் பார்க்கும்
குப்பை கிளறிப் புச்சி புழுக்கள்
கொத்தித் தின்னக் கொடுக்கும்

காற்றுக் கிளைகள் ஆடினாலும்
காதைக் கொடுத்துக் கேட்கும்
சோற்றைப் போட்டால் குஞ்சைக் கூவிச்
சொண்டால் கிளறிக் காட்டும்

வட்டமிட்டுப் பருந்து வந்து
வானத் திலே பறந்தால்
செட்டைக் குள்ளே குஞ்சை வைத்துத்
தெய்வம் போலக் காக்கும்.
இறுதியாக மாற்றியது: புதன், 16 நவம்பர் 2022, 6:31 காலை