பந்தடிப்போம் நாங்கள்

பந்தடிப்போம் பந்தடிப்போம்
பந்தடிப்போம் நாங்கள்
பாய்ந்துதுள்ளி ஓடிஆடிப்
பந்தடிப்போம் நாங்கள்

எங்கள்பக்கம் வெற்றிகொள்ளும்
என்றெதிர்த்துக் கூறி
எதிரெதிராய் நின்றுபந்தை
எடுத்தெறிந்து மாறிப்-பந்தடிப்போம்

உச்சிவானில் உயரும் பந்தை
ஓடிக்கையால் ஏந்தி
அச்சமின்றி எவர்வரினும்
ஆர்ப்பரித்துப் பாய்ந்து-பந்தடிப்போம்

வந்தபந்தை மறித்தடித்து
மற்றப்பக்கம் போக்கி
மண்டியிட்டுக் கைகளினால்
மாற்றுப்பந்தைத் தாக்கிப்-பந்தடிப்போம்

விழுந்துயர்ந்த பந்தைத்தட்டி
வீரமுடன் கூடி
வெற்றிவெற்றி யென்றுசொல்லி
வெற்றிப்பாட்டுப் பாடிப்-பந்தடிப்போம்.
இறுதியாக மாற்றியது: புதன், 16 நவம்பர் 2022, 6:28 காலை