123. பொழுதுகண்டிரங்கல்

குறள் பால்:காமத்துப்பால். குறள் இயல்:கற்பியல். அதிகாரம்: பொழுதுகண்டிரங்கல்.

1221. மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.
1222. புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.
1223. பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை
துனிஅரும்பித் துன்பம் வளர வரும்.
1224. காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.
1225. காலைக்குச் செய்தநன்று என்கொல்
எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை.
1226. மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.
1227. காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.
1228. அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.
1229. பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.
1230. பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.
Last modified: Wednesday, 2 February 2022, 10:25 AM