வாய்மொழி இலக்கியத்தில் நையாண்டிப்பாடல்கள் - ஒரு நோக்கு

Written by

பரம்பரை பரம்பரையாக வாய்மொழிப்பாங்கில் மக்களால் பேணப்பட்டுவரும் இலக்கியங்கள் வாய்மொழி இலக்கியங்கள் என அழைக்கப்படுகின்றது. மக்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், நம்பிக்கைகள் என்பவற்றின் வெளிப்பாடாக இவை அமைந்திருக்கும். வாய்மொழி இலக்கியத்தில் வாய்மொழிப்பாடல்கள் சிறப்புமிக்கவையாகும். மண்ணின் மைந்தர் தம் மனக்கருவரையில் கருக்கொண்டு உருப்பெற்று உயிர்பெற்று உலாவரும் உள்ளத்தின் உண்மையான வெளிப்பாடுகளே வாய்மொழிப்பாடல்களாக மலர்ந்துள்ளன. இவை மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையான நிகழ்வுகளை யதார்த்த பூர்வமாக வெளிப்படுத்தி நிற்கின்றன. ஏட்டுக்கல்வி பயிலாத இயல்பான புலமையும், இலக்கிய இரசனையும் உள்ள மக்களே இத்தகைய பாடல்களைப் பாடியுள்ளனர். இவை ஏட்டில் எழுதாக் கவி, மலையருவி, காற்றிலே மிதந்த கவிதை, மக்கள் பாடல் என்று பலவாறு அழைக்கப்படுகின்றன. குழந்தை அழும்போது, அதனைத்தூங்க வைக்கும்போது, விளையாடும்போது, காதல் வெளிப்பாட்டின்போது, தொழில் நடவடிக்கைகளின் போது, சமய செயற்பாட்டின்போது, ஒருவரது இறப்பின்போது என்று பலவேறு சந்தர்ப்பங்களில் மக்கள், இத்தகைய வாய்மொழிப்பாடல்களைப் பாடியுள்ளனர். இப்பாடல்களில் நையாண்டித் தன்மையும், கேலியும் மேலோங்கி நிற்கின்றன. இத்தகு சிறப்பு மிக்க பாடல்களே நையாண்டிப்பாடல்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன.

 

வெவ்வேறு பட்ட சந்தர்ப்பங்களில் ஒருவரது அல்லது ஒரு குழுவினரது குணாதிசயங்களை நையாண்டிசெய்து பாடப்படுவனவாக அமைந்த பாடல்களே நையாண்டிப்பாடல்களாகும். இவை கேலிப்பாடல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. முற்காலத்தில் சான்றோர் இத்தகைய பாடல்களை அங்கதப்பாடல்கள் என்று அழைத்தனர். புகழ்வது போன்று பழித்தும் பழிப்பது போன்று புகழ்ந்தும் பாடப்பட்ட பாடல்களைத் தமிழ் இலக்கியத்தில் பரவலாகக் காணலாம். நையாண்டி செய்யும் பழக்கம் மனித சமுதாயம் தோன்றியதிலிருந்து இன்றுவரை மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது. நையாண்டிப்பாடல்களில் நகைச்சுவை உணர்வு வெளிப்பட்டாலும் இவை நகைச்சுவைப் பாடல்களிலிருந்து வேறுபட்டவை. நகைச்சுவை மனிதனைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.
    'ஓட்டப்பானைக்க ஓணான் பூந்தது சங்கு மாமா
    அடிக்கப்போனேன் கடிக்க வந்தது தோழமாமா'

என்னும் பாடல் ஒருவரை நையாண்டி செய்யாது நகைச்சுவை உணர்வைத் தருவதாக உள்ளது. ஆனால் நையாண்டி மனிதனை அழவைத்து அவனது ஆளுமையை அவமானப்படுத்தி போபம் கொள்ளச் செய்வதாக அமைந்திருக்கும். அத்துடன் மனிதனைச் சிறுமைப்படுத்தி தலைகுனிய வைத்து வேடிக்கை பார்க்கின்றன. இத்தகைய பாடல்களை ஆண்களும் பெண்களும் பாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

சில வகையான நையாண்டிப்பாடல்கள் சமூக சீர்திருத்தத்தை வேண்டிநிற்பனவாக உள்ளன. பண்டைய சமூகத்தில் பொருந்தாத்திருமணம் செய்வது அதிகமாகக் காணப்பட்டது. வயது கூடிய ஆண் வயது குறைந்த பெண்னைத் திருமணம் செய்ய விரும்பும்போது பெண்கள் குறிப்பிட்ட ஆணைக் கேலி செய்துள்ளனர். எடுத்துக்காட்டு,
        கச்சான் காற்றடித்து
       காட்டில் மரம் நின்றது போல்
       உச்சியிலே நாலு மயிர்
       ஓரமெல்லாம் வழுக்கை.
      முப்பத்திரண்டு பல்லில்
      மூணு பல்லுதான் மீதி
      காகக் கறுப்பு நிறம் ஒரு
     காலுமல்லோ முடமவர்க்கு
     கூன முதுகழகா
     குழிவிழுந்த நெஞ்சுக்காரா
     ஓலைப் பெட்டி வாயோட
     உனக்கெதுக்கு இந்த ஆசை
இப்பாடல்களில் பொருந்தாக் காதலுக்கு எதிரான பெண்களின் எதிர்ப்புக்குரல் நையாண்டியாக வெளிப்பட்டு நிற்கின்றது.


சமூகத்தில் அதிகாரமும் வசதியும் கொண்ட வயது கூடிய ஆண்கள் அழகான இளம்பெண்களை திருமணம் செய்வதற்கு முனைகின்றமையினை
       தங்கத்தால் சங்கிலியும்
      தகதகத்த பட்டாடை
      பட்டனத்துச் செருப்பு
      பகல் முழுதும் சுற்றி வாரார்
என்னும் பாடல் மூலம் கேலி செய்கின்றனர். வயது கூடிய ஆணை குடும்ப வறுமை காரணமாக திருமணம் செய்துகொண்ட பெண்ணொருத்தி
     வாண்டதெல்லாம் இந்த
     வயிற்றுக் கொடுமையினால்
     இருமல் தலையிடியாம் கிழவனுக்கு
     என்ன சுகம் எந்தனுக்கு
என்று வேதனைப்படுகின்றாள். பெண்ணின் அடிமனதில் தோன்றும் ஆற்றாமையும் வேதனையும் நையாண்டியாகவே வெளிப்படுகின்றது.


ஒருவருடைய உடல்தோற்றத்தின் பலவீனத்தை நையாண்டி செய்யும் பாடல்கள் கேலியின் உச்சத்தை தொட்டு நிற்கின்றன. உடல் உறுப்புக்களின் குறைபாட்டினை மிக மோசமாகக் கூறி நையாண்டி செய்யும் பாடல்கள் வசைப் பாடலாகவே உள்ளது.
     கண்ணும் ஒரு பொட்டை
      காதும் செவிடாம்
     குருத்தெடுத்த வாழைபோல இவர்
     கூனி வளைந்திருப்பார்.
     சுட்ட கட்டை போல
     சுடுகாட்டுப் பேய்போல
    அட்ட முகறா நீ
    அடுப்படிக்கும் ஆகுமாடா
    வெள்ளை வெள்ளை என்று
    வீறாப்புக் கொள்ளாதே
    பாலேறிச் செத்த
     பதக் கடை என்றறியாய்'
என்னும் பாடல்களின் மூலம் முற்கூறிய கருத்து நன்கு புலனாகின்றது.


ஆழ்ந்து நோக்கும்போது பல கேலிப்பாடல்களில் காழ்ப்புணர்ச்சி தொனிக்கின்றது. ஒருவரது குலத்தையும், கோத்திரத்தையும் அவமானப்படுத்தி கோபம் கொள்ளச் செய்யும் தன்மை இத்தகைய பாடல்களில் உண்டு. தமிழர்களின் பண்டைய விளையாட்டுக்களில் 'கொம்பு முறி' முக்கியமானதாகும். வடசேரி – தென்சேரி என இரு சேரிகளாக வகுக்கப்பட்ட பழைய முறைப்படி இது நடைபெறும். ஒரு குடும்பத்திலேயே கணவன் ஒரு சேரியாகவும் மனைவி ஒரு சேரியாகவும் இருப்பர். இது உணர்வைத் தூண்டி ஆபத்தையும் ஏற்படுத்துவதாகும்.
    வடசேரியான் கொம்பு எங்கே எங்கே
   வண்ணாண்ட சாடிக்கு உள்ளே உள்ளே
    தென்சேரியான் கொம்பு எங்கே எங்கே
    செம்பகத்தாளுக்கு உள்ளே உள்ளே'
என்று அமையும் பாடல் சேரியினை கேலி செய்கின்றது. இத்தகைய பாடல்களை மட்டக்களப்பின் சில பகுதிகளில் காணலாம்.
    'வறுத்த கடலை தின்னி
    வகை வகையாத் தவிடு தின்னி
    சொறியாந் தவளை தின்னி
    சொல்லி வாடா தெம்மாங்கை'
என்னும் பாடல் இந்தியாவில் வழக்கில் உள்ளது. கிராமங்களில் மாடுமேய்க்கும் சிறுவர்கள் நேரத்தைப் போக்க ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு இத்தகைய பாடல்களைப் பாடுவதாக அறிய முடிகின்றது.


நையாண்டிப்பாடல்கள் வெளிப்படையாகக் கருத்துக்களைப் புலப்படுத்தி நிற்கும் அதே வேளை மறைமுகமாகவும் குறியீட்டுமொழியிலும் கருத்துக்களை வெளிப்படுத்தி நிற்கின்றன. மக்கள் கவிஞர்களின் புலமையாற்றலை இத்தகைய பாடல்களினூடாக மிகத்துல்லியமாக அறியமுடிகின்றது.
   'என்ன பிடிக்கிறாய் அந்தோனி
  எலிப்பிடிக்கிறேன் சிஞ்ஞோரே
   பொத்திப் பொத்திப்புடி அந்தோனி
   பூறிக் கொண்டோடிற்று சிஞ்ஞோரே
  ' கோண கோண மலையேறி
  கோப்பிப் பழம் பறிக்கையிலே
    ஒரு பழம் குறைஞ்சதெண்டு
   ஓலம் வைச்சான் வெள்ளத்துரை'
என்னும் பாடல்கள் அந்நியர் ஆட்சி இடம்பெற்றபோது தமது எதிர்ப்பைக் குறியீட்டு மொழியில் அங்கதமாக வெளிப்படுத்திப் பாடப்பட்டள்ளது. வாய்மொழி இலக்கியங்கள் வரலாற்று மூலங்களாகும் என்பதற்கு இந்தப் பாடலும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.


உறவு முறைகளை வைத்துக்கொண்டும் கேலி செய்யும் மரபு நீண்டகாலமாக இருந்து வருகின்றது. இத்தகைய பாடல்கள் ஒருவருக்கு ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தவனவாக அமைந்துள்ளன. மாப்பிள்ளையை மாப்பிள்ளையின் மனைவியின் தங்கை(கொழுத்தியாள்) கேலி செய்வது வழக்கமான மரபு. மாப்பிள்ளை மாமனார் வீட்டுக்கு வந்திருக்கின்றான். அப்போது கொழுத்தியாள் சந்தனத்தை தனது மச்சானின் மேல் கொட்டி கேலி செய்கின்றாள்.
    ஒரு கிண்ணிச் சந்தனம்
    ஒரு கிண்ணிக் குங்குமம்
   அள்ளி அள்ளிப் பூசுங்கோ
   அருணப்பந்தல் ஏறுங்க
    ராசாக் கணக்கில்
   ராசமக்க தோளிலே
   பொறிச்ச பூவும் பொட்டியிலே
   தொடுத்த பூவும் தோளிலே...'
மேற்கூறிய கருத்தினை இப்பாடலின் மூலம் தெரிந்துகொள்ளமுடியும்.


திருமணத்தின்போது சீதனம் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளது. திருமணப்பேச்சின்போதே சீதனம் தீர்மானிக்கப்பட்டுவிடும். மக்கள் பாடல்களிலும் இதன் தாக்கம் உண்டு. சீதனம் கேட்கும் ஆணிடம் பெண்ணைப் பெற்ற தாய்
   'பத்தேக்கர் காணியும்
    பால் மாடும் வேணுமெங்காய்
   இத்தனையும் தாறதிற்கு
    ஒங்கிட உத்தியோகம் என்ன கிளி'
என்று நையாண்டி செய்கிறாள். காதல் பாடல்களிலும் நையாண்டி மேலோங்கிக் காணப்படுனிறது. காதலுணர்ச்சி மிக்க ஆண்,
     'கண்ணாடி வளையல்போட்டு
     களையெடுக்க வந்த புள்ளே
     கண்ணாடி மின்னலிலே
     களையெடுப்பு பிந்துதடி.'
என்று கேலி செய்ய
    'வாய்க்கால் வரம்புச் சாமி
     வயல்காட்டுப் பொன்னுச் சாமி
    களையெடுக்கும் பெண்களுக்கு
    காவலுக்கு வந்த சாமி'
பதிலுக்கு அந்தப் பெண்ணும் கேலி பேசுகின்றாள்.


நாட்டார் பாடல்கள் பொதுவாக கவி நயம் மிக்கவை. எளிமையும் அழகும் ஆழமான கருத்தும் கொண்டவை. ஏட்டு இலக்கியத்தினை விடவும் யதார்த்தத்திலும் கற்பனையிலும் மிஞ்சி நிற்பவை. நையாண்டிப்பாடல்களும் இதற்கு விதிவிக்கல்ல. இப்பாடல்களில் எதுகை மோனை நிறைந்திருப்பதோடு உவமை உருவக அணிகளும் கையாளப்பட்டிருப்பதைக் காணமுடியும்.
    'மாடுமோ செத்தல் மாடு
    மணலுமோ கும்பி மணல்
    மாடிழுக்க மாட்டாமல்
    தானிழுத்து மாய்கிராண்டி'
என்று அமைந்த பாடலில் மனிதன் மாடாக உருவகிக்கப்பட்டுக் கேலி செய்யப்படுகின்றான்.
    நாணற் பூப்போல
    நரைத்த கிழவனுக்கு
    குங்குமப் பூப்போல இந்த
    குமர்தானோ வாழுறது'.

நாணற்பூ நரைத்த கிழவனுக்கும் குங்குமப் பூ குமரிப்பெண்ணுக்கும் அழகிய உவமைகளாக கையாளப்பட்டுள்ளன. ஓசை நயம் பொருந்திய பாடல்களாகவும் இப்பாடல்கள் அமைந்திருக்கும்.


இலக்கிய மொழி என்பது இலக்கியங்களின் தன்மைக்கேற்பவும் கையாள்பவர்களின் வெளிப்பாட்டு ஆற்றலுக்கு ஏற்பவும் பேசப்படுகின்ற பொருளுக்கேற்பவும் வேறுபட்டதாக அமையும். ஏட்டு இலக்கியப் பாடல்களிலிருந்து வாய்மொழி இலக்கியப் பாடல்கள் வேறுபட்டவை. வாய்மொழிப்பாடல்களில் பேச்சுமொழி கூடுதலாகக் கையாளப்பட்டிப்பதனை அவதானிக்கலாம். நையாண்டிப்பாடல்களின் மொழிநடை வேறுபட்டது. குறிப்பாக அவை பரிவோடு குழந்தையைத்தாலாட்டும் தாயின் தாலாட்டுப் பாடல்களிலிருந்தும் அன்பால் இணைந்த காதலர்களின்; காதல் பாடல்களிலிருந்தும் வேறுபட்டவை.
    அன்ன நடையழகி
     அலங்கார உடையழகி
    பின்னல் நடையழகி - செல்லம்மா
    புறப்படம்மா தேருபார்க்க'
    மதன வடிவழகா
    மாமோகச் சொல்லழகா
     வண்ண உருவழகா - என் ஆசை மச்சானே
     வரமாட்டேன் தேரு பார்க்க
என்னும் காதற் பாடலில் சொற்கள் ஒவ்வொன்றும் இனிமையும் மனதில் அன்பையும் தூண்டுவதாக அமைந்துள்ளன.


    'பண்டி, குரங்கு தின்னி
    பச்ச உடும்பு தின்னி
    எலியாக்கித் தின்னி – எனக்கு
    என்ன கத சென்னாயடா'
என்னும் கேலிப்பாடல் ஒருவரது மனதை வெகுவாகப் பாதிக்கும் தன்மையில் அமைந்துள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு சொல்லும் கோபத்தை ஏற்படுத்தி வேதனைப்படுத்தத் தக்கதாக உள்ளது. 'கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள்' என்னும் நூலில் எஸ்.முத்துமீரான் இப்பாடலினையும் தொகுத்துள்ளார். கூனல் முதுகு, சுட்ட கட்டை, குழிவிழுந்த நெஞ்சு,காகக் கறுப்பு,சுடுகாட்டுப்பேய், அட்ட முகறா,இஞ்சி தின்ற குரங்கு போன்ற பல சொற்றொடர்கள் நையாண்டிப்பாடல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவை மக்கள் இலக்கியப்பாடல்களின் யதார்த்தப்பாங்கினைத் தெளிவாக அடையாளப்படுத்தி நிற்கின்றன.


ஆக, வாய்மொழிப்பாடல்களில் நையாண்டிப்பாடல்கள் மனிதர்களின் வித்தியாசமான உணர்வு நிலையை பிரதிபலிப்பவையாகவும் மனிதனின் குணாம்சங்களை வாழ்வியல் அம்சங்களோடு தொடர்புபடுத்தி யதார்த்த பூர்வமாக எடுத்துக் கூறுபவையாகவும் உள்ளன. நையாண்டியினூடாக எதிர்ப்புணர்வு வெளிப்படுவதோடு சமூக மாற்றத்திற்கான முனைப்பும் புலப்படுகின்றது. சில வகையான பாடல்கள் காழ்ப்புணர்ச்சியோ, பழிவாங்கலோ, அவமானப்படுத்தலோ அற்றனவாக அமைய சில வகையானவை மிகமோசமான வசைபாடலாகவும் பழிவாங்கலாகவும் அவமானப்படுத்தலாகவும் மனிதனைச் சிறுமைப்படுத்தி ஏளனம் செய்வனவாகவும் உள்ளன. எது எப்படியாயினும் நையாண்டிப்பாடல்கள் மனித உணர்வின் ஊற்றுக்களாகவும். வாய்மொழிப்பாடல்களில் முக்கிய வெளிப்பாடுகளாகவும் உள்ளமை புலனாகின்றது.

 

தொகுப்பு- த.மேகராசா(கவிஞர் மேரா), வலயக் கல்வி அலுவலகம், மட்டக்களப்பு

Read 3106 times
உருவாக்கம்
த.தொ.தொ கிளை, கல்வியமைச்சு,இலங்கை
பக்க வரிசைப்படுத்தல் | மறுப்பு
பதிப்புரிமை © 2012-2016 | த.தொ.தொ கிளை, கல்வியமைச்சு,இலங்கை