நாடக அரங்கின் அடிப்படை மூலங்கள்

Written by

நாடகத்துக்கு நடிகன், இடம், பார்வையாளர் இம் மூன்று அம்சங்களும் இன்றியமையாதனவாகக் காணப்படுகின்றன. அதாவது நாடகத்தை ஆற்றுகை செய்வதற்கு நடிகனும், ஆற்றகை செய்வதற்கான இடமும், பார்த்து ரசிப்பதற்கு பார்வையாளர்களும் இன்றி அமையாதனவாகக் காணப்படுகின்றன.
அரங்கில் நடிகனின் முக்கியத்துவம்
நாடகத்தில் பிரதான அம்சமாகக் காணப்படுவது நடிகன் ஆவான். நாடகத்தின் இதயம் என கூறக்கூடியவன் நடிகன் ஆவான்;. துணைச் சாதனங்கள் இல்லாமல் நாடகத்தை ஆற்றுகை செய்யலாம். ஆனால் நடிகன் இல்லாமல் நாடகத்தை ஆற்றுகை செய்ய முடியாது.
உலக நாடக வரலாற்றில் கிரேக்க காலத்தில் தோன்றிய தெஸ்பீஸ் உலகின் முதலாவது நடிகன் எனப் போற்றப்படுகின்றான்.
நடிகனானவன் வழங்கப்படுகின்ற பாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி நடிப்பின் மூலம் வெளிப்படுத்துபவன்.
நாடகம் வெற்றியடைய உதவுபவன்.
புத்தாக்க சிந்தனை மூலம் பாத்திரத்தை உருவநிலைப்படுத்தி உயிர் கொடுப்பவன்.
பார்வையாளர்களின் மனங்களில் உடனடி எதிர்வினையை உருவாக்குபவன்.
நால்வகை அபிநயங்களான ஆங்கிகம், ஆஹாமிகம், வார்ச்சிகம், சாத்வீகம் முதலான அபிநயங்களை சித்திரிப்பவன்.
அரங்கின் முக்கியத்துவம்
நாடகம் நிகழ்த்தப்படும் இடம் அரங்கு எனப்படும். அரங்கு என்பது ஆங்கிலத்தில் Theatre என அழைக்கப்படுகின்றது.Theatre என்னும் சொல் ஆனது Theatrone என்ற கிரேக்க சொல்லில் இருந்தே தோற்றம் பெற்றது என கூறப்படுகின்றது.
அரங்கானது உயிரோட்டமாக இயங்க வேண்டுமாயின் அதில் நாடகம் ஆற்றுகை செய்யப்படல் வேண்டும்.
திறந்த வெளி அரங்கு, வட்ட அரங்கு, படச்சட்ட அரங்கு (புறசீனிய அரங்கு) முக்கோண அரங்கு, சதுர அரங்கு, செவ்வக அரங்கு போன்ற அரங்க அமைப்புக்கள் காணப்பட்டதாக உலக நாடக வரலாறு மூலமாக அறியக்கூடியதாக உள்ளது.

பார்வையாளரின் முக்கியத்துவம்
பார்வையாளர் இன்றி நாடகம் இல்லை. நாடகத்தில் பார்வையாளர்களும் முக்கிய இடம் பெறுகின்றனர். நாடகம் வெற்றி அடைவதற்கும் மேலும் மேலும் வளர்வதற்கும் பார்வையாளர் அவசியமாகின்றனர். இவர்களிடம் கற்பனை பண்ணகின்ற திறன் உண்டு. அதனால் அரங்கில் கதிரை இருப்பதனைப் பார்த்து அதனை சிம்மாசனம் என கருதுகின்றனர். இதனை விட நாடகத்தில் திருத்தங்களையும் மாற்றங்ககையும் செய்வதற்கும் பார்வையாளர்கள் அவசியமாகின்றனர். பார்வையாளர்கள் நாடகத்தைப் பார்த்து ரசிக்கும் போது அதன் ஊடாக நவரசம் உணரப்படுகின்றது. உதாரணமாக ஈடிபஸ் மன்னன், அன்ரிக்கனி போன்ற நாடகங்களைப் பார்க்கும் போது சோக உணர்வு வெளிவரும்.
நாடகத்துக்கு நடிகன், இடம், பார்வையாளர் இம் மூன்றும் எவ்வாறு முக்கியம் பெறுகின்றது என்பது புலனாகின்றது.

தொகுப்பு:- ந.ரதீஸ்க், ஆசிரியர், மட்/பட்/களுமுந்தன்வெளி அ.த.க.பாடசாலை

Read 2621 times
Developed by
ICT Branch, Ministry of Education, Sri Lanka
Site Map | Disclaimer
Copyrights © 2012-2016 | ICT Branch, Ministry of Education, Sri Lanka