நாட்டார் இலக்கியம்

Written by

உலகில் முதலில் தோன்றிய இலக்கியங்கள் நாட்டார் இலக்கியங்கள் என வரலாறு சொல்கிறது. மண்ணிண் மைந்தர் தம் மனக் கருவறையில் கருக்கொண்டு உருப்பெற்று உயிர்பெற்று உலாவரும் உள்ளத்தின் உண்மையான வெளிப்பாடுகளே நாட்டார் இலக்கியங்கள். இவற்றை நாட்டுப்புற இலக்கியங்கள், வாய்மொழி இலக்கியங்கள் ஏட்டில் எழுதா இலக்கியங்கள் என்றெல்லாம் அழைப்பர். இவை எழுத்திலக்கியத்திலிருந்து வேறுபட்டவையாக- தனித்துவமான பண்புகளைக் கொண்டனவாக அமைந்திருக்கும். நாட்டார் பாடல்கள், நாட்டார் கதைகள், நாட்டார் கதைப் பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள் என வகுத்து நோக்கத்தக்கவையாகவும் உள்ளன.


நாட்டார் இலக்கியத்திற்கு ஆதியுமில்லை அந்தமுமில்லை. மனித இனம் தோன்றியபோது இவ்விலக்கியங்களும் தோற்றம்பெறத் தொடங்கின. இவ்விலக்கியங்களில் பெரும்பாலானவை (கதைப் பாடல்களைத்தவிர) ஆசிரியர் இல்லாதவைளூ நீண்டகாலமாக வாய்மொழி வாயிலாக வழங்கி வருபவைளூ பிரதேசத்திற்குப் பிரதேசம் மக்களின் பண்பாட்டுக்குப் பண்பாடு வேறுபட்டுக் காணப்படுகின்றவை. கற்றோர் மட்டும் படித்து இன்புறுவதற்கு ஏற்றாற்போல் உள்ள எழுத்திலக்கியங்கள் போன்று இவை இல்லை. மாறாக அனைவரும் பொருள் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையும் இனிமையும் உடையவை. மக்களால் மக்களுக்காக ஆக்கப்பட்டவை நாட்டார் இலக்கியங்கள் என்னும் வகையில் இவ்விலக்கியங்களில் பெரும்பாலும் யதார்த்தத்தைக் காணலாம். இத்தகைய பண்புகளை ஏட்டு இலக்கியங்களில் காணமுடியாது.


நாட்டார் இலக்கியங்களில் நாட்டார் பாடல்கள் முக்கியமானவையாகும். நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் அம்சங்களை குறிப்பாக பிறப்பு முதல் இறப்பு வரையான நிகழ்வுகளைப் பாடல் வடிவில் எடுத்தியம்புவதாக நாட்டார் பாடல்கள் அமைந்திருக்கும். வாய்மொழிப் பாடல்கள் ஏட்டில் எழுதாக்கவிகள் என்றெல்லாம் அழைப்பர். நாட்டார் பாடல்களை தாலாட்டுப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், காதற் பாடல்கள், தொழில் பாடல்கள், சமயவழிப் பாடல்கள், ஒப்பாரிப் படல்கள் என்று வகைப்படுத்தி நோக்கலாம். இப்பாடல்கள் மிகுந்த கவிநயம் பொருந்தியனவாக உள்ளன. உவமை, உருவக, எதுகை, மோனை அணிகளோடு பொருந்திய மிகச் சிறந்த பாடல்களாக இவை உள்ளன. ஒரு தாய் தனது பிள்ளையை தவமிருந்து பெற்றெடுத்தமையை
        'ஆடி அமாவாசையிலே – நான்
        ஆயிரம் பேருக்கு அன்னமிட்டு
       தேடிய புண்ணியத்தால் - நீ
        தெய்வமாய் உதித்தாயோ'
என்று உணர்வு பூர்வமாகப் பாடுகின்றாள். சிறுவர்கள் விளையாடும்போது பல நாட்டார் பாடல்களைப் பாடி மகிழ்வர். காதற் பாடல்களில் கேலிப்பாடல்களும் உண்டு.

 

        கச்சான் அடித்த பின்பு
       காட்டில் மரம் நின்றதுபோல்
       உச்சியிலே நாலுமயிர் - அவர்
       சீரமெல்லாம் தான் வழுக்கை

என்னும் பாடலைக் குறிப்பிடலாம்.

விவசாயப் பாடல்கள், மீன்பிடிப் பாடல்கள்; என தொழிற்பாடல்களைப் பிரித்து நோக்கலாம். வேலையினை சலிப்பின்றி செய்யவும், களைப்பில்லாது செய்யவும் பாடல்களைப் பாடினர்.

நாட்டார் கதைகளுக்கு இன்னும் சமூகத்தில் முக்கிய பங்குண்டு. இரவு வேளையில் நிலவில், முற்றத்தில் வீற்றிருந்து வயது முதிந்த ஒருவர் கதை சொல்லும் மரபு நீண்டகாலமாக இருந்து வருகின்றது. நல்லதங்காள் கதை, வாளமீன் கதை, ஏழு அண்ணனுக்கு ஒரு தங்கச்சி, வண்டில் மாட்டை பேய் மறித்;த கதை போன்ற கதைகளை இவ்வகையில் குறிப்பிடலாம். இக்கதைகளையும் அவற்ற்pன் பொருள் சார்ந்து பிரித்து நோக்கமுடியும். நாட்டார் கதைகளை பாடல் வடிவில் எடுத்துச் சொல்லுபவை நாட்டார் கதைப் பாடல்களாகும். நல்லதங்காள் கதைப் பாடல் உதாரணமாகும்.

 

நாட்டார் இலக்கியத்தில் பழமொழிகள் முக்கியமானவையாகும். நினைப்பதற்கும் எட்டாத பழங்காலத்திலிருந்தே மக்கள் வாழ்வில் வாழ்ந்து வருபவை பழமொழிகள் என்பதைப் பழமொழியிலுள்ள 'பழ' என்னும் சொல் உறுதிப் படு;த்துகின்றது. நாட்டுப்புற மக்களின் பேச்சில் இயல்பாகவே பழமொழிகள் பிறக்கின்றன. இவை கருத்துக்களின் பொருளை ஆழமாக-தெளிவாக விளக்குகின்றன. 'பழமொழி பொய்த்தால் பழஞ்சோறு சுடும்' என்னும் பழமொழி சமூகத்தில் பழமொழியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றது.

நாட்டார் இலக்கியங்களிலே குறுகிய அமைப்புக் கொண்ட பழமொழிகளும் விடுகதைகளும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. பழமொழிகளைப் போன்றே விடுகதைகளும் சமுதாயத்தின் அனுபவ முதிர்ச்சியையும் அறிவுக் கூறுகளையும் விளக்கும் சான்றாக உள்ளன. மறை பொருளிலிருந்து விடுவிக்கப்பட வேண்டிய கதையே விடுகதையாகும். வினா எழுப்பும் வகையாகவும் விடையிறுக்கும் தன்மையாகவும் விடுகதைகள் உள்ளன. அறிவு ஊட்டுவதும் சிந்தனையைத் தூண்டுவதும் விடுகதையின் குறிக்கோள் ஆகும். சிறுகதை அறிவை வளர்ப்பதோடு சிறியோர்க்கும் பெரியோர்க்கும் தொடர்பை ஏற்படுத்துகின்றது. விடுகதைகள் பல பொருள் சார்ந்ததாக உள்ளன. உதாரணமாக
            எட்டாத ராணி
           இரவில் வருவாள்
           பகலில் மறைவாள் - நிலா
இப்பழமொழி இயற்கைப் பொருள் சார்ந்ததாக உள்ளது.

 

பொதுவாக நாட்டார் இலக்கியங்கள் சுவையும், நயமும், அறிவுத்தன்மையும் மிக்கவையாகும். வரலாற்று மூலங்களாகவும் இவை பயன்படுத்தப் படுகின்றன. இன்றைய நவீன சிந்தனைச் சூழலில் நாட்டார் இலக்கியங்கள் மருவிச் செல்லத்தக்க சூழல் உள்ளது. இவற்றைப் பாதுகாப்பது எல்லோரதும் கடமையாக இருக்க வேண்டும்.

 

தொகுப்பு- த.மேகராசா(கவிஞர் மேரா), வலயக் கல்வி அலுவலகம், மட்டக்களப்பு

Read 8493 times
Developed by
ICT Branch, Ministry of Education, Sri Lanka
Site Map | Disclaimer
Copyrights © 2012-2016 | ICT Branch, Ministry of Education, Sri Lanka