நாட்டார் பாடல்கள்

Written by

நாட்டார் இலக்கியத்தில் ஒருவகையே நாட்டார் பாடல்களாகும். நாட்டுப்புற மக்களால் பாடப்படும் பாடல்களாக இவை அமைந்திருக்கும். இவை நாட்டுப்புற மக்களின் வாழ்வோடு வாழ்வாகப் பின்னிப் பிணைந்திருக்கும்; சிறப்புமிக்கவை. மனிதனின் பிறப்பு முதல் இறப்புவரையான வாழ்க்கையின் நிகழ்வுகள் நாட்டார் பாடல்களின் பொருளாக அமைந்துள்ளன. மண்ணின் மைந்தர் தம் மனக் கருவறையில் கருக்கொண்டு உருப்பெற்று உயிர்பெற்று உலாவரும் உள்ளத்தின் உண்மையான வெளிப்பாடுகளாக விளங்கும் நாட்டார் பாடல்களை 'வாய்மொழிப் பாடல';, 'நாட்டுப்பாடல்', 'நாடோடிப்பாடல்', 'நாட்டுப்புறப்பாடல்', 'பாமரர்பாடல்', 'ஏட்டில் எழுதாக்கவி', 'காற்றிலே மிதந்த கவி' என்றெல்லாம் பலவாறு அழைப்பர். நாட்டார் பாடல்கள் பல சிறப்புப் பண்புகளைக் கொண்டனவாகவும் பல வகையினதாகவும் அமைந்துள்ளன.

நாட்டார் பாடல்கள் நாட்டுப்புற மக்களால் நீண்டகாலமாக வாய்மொழி வாயிலாக வழங்கி வருபவையாக அமைந்திருக்கும். பாடியவர் யாரென்றோ, தோன்றிய காலம் எதுவேன்றோ அறிந்து கொள்ள முடியாது. அதேவேளை எளிமையாகவும் இனிமையாகவும் கற்பனை வளமும் கவிநயமும் பொதிந்திருக்கும். இயற்கை அன்னை தன்னை முகம் பார்க்கத் தேர்ந்தேடுத்த தெளிவான கண்ணாடியாக இவை அமைந்திருப்பதோடு எழுதாத கவிகளாகவும் இருக்கும். நாட்டார் பாடல்களில் ஓசை இருக்கும், உணர்ச்சி இருக்கும், சொல் தொடை அழகிருக்கும் எனினும் இலக்கண வரம்பிற்கு உட்படாமலும் இருக்கும்.

மனிதனின் வாழ்வியல் அம்சங்களோடு இணைந்ததாக வெளிப்படும் நாட்டார் பாடல்களை தாலாட்டுப்பாடல், விளையாட்டுப்பாடல், காதற்பாடல், தொழிற்பாடல், சமய நிலைசார் பாடல், ஒப்பாரிப் பாடல் என பொதுவாக பிரித்து நோக்க முடியும்.

குழந்தைகளைத் தூங்கவைப்பதற்காக குழந்தைகளுக்கு விருப்பமான பொருட்களையும் விருப்பமானவர்களையும் அவர்களின் சிறப்புக்களையும் சொல்லி தாலாட்டுப் பாடல் பாடுவர். தாலாட்டு என்பது தால்10பாட்டு எனப் பிரிக்கப்படும். தால் என்பது நாக்கு. நாக்கை ஆட்டிப் பாடும் பாடல் தாலாட்டுப்பாடல் எனப்பட்டது. தாய்மை உணர்வின் வெளிப்பாடாகவே இத்தகைய பாடல்கள் மலர்கின்றன. தாய்மை உலகிற்கு வழங்கிய முதல் இலக்கியப் பரிசுதான் 'தாலாட்டு' என்பர் தமிழண்ணல். குழந்தை தூங்கத் தொடங்கும் நேரத்தைப் பொறுத்தே தாலாட்டின் அளவு அமையும். தாயொருத்தி குழந்தையை தாலாட்டும் போது

'அள்ளி மிழகு தின்னு
அறுபதினாள் நோன்பிருந்து
கன்னி சிறையிலிருந்து
கண்டெடுத்த குஞ்சரமோ'

என்று தன் குழந்தையை நோன்பிருந்து பெற்றமையை எடுத்துரைக்கின்றாள்.

சிறுவர்கள் விளையாடும்போது பல பாடல்களைப் பாடுவர். இத்தகைய பாடல்கள் விளையாட்டுப்பாடல்களில் அடங்கும். இவற்றை குழந்தைப் பாடல்கள் என்றும் கூறுவர் இப்பாடல்கள் குழந்தைகள் தாங்களே பாடுவனவாகவும் குழந்தைகளுக்காக மற்றவர்கள் பாடுவனவாகவும் அமைந்திருக்கும். சிறுவர்கள் கவடி விளையாடும்போது

'கவடியடிக்கக் கவடியடிக்கக்
கை கால் முறியக் கை கால் முறியக்
காலுக்கு மருந்து தேடிக்கட்டு தேடிக்கட்டு'

என்று பாடுவர். அதேவேளை அவர்கள் கிட்டிப்பொல் விளையாடும்போது

     'ஆலையிலே சோலையிலே ஆலங்காடிச் சந்தையிலே
     கிட்டிப்புள்ளும் பம்பரமும் கிறுகியடிக்கப் பாலாறு –பாலாறு
      பாலாறு பாலாறு பாலாறு' 
என்று பாடுவர்.

நாட்டார் பாடல்களில் காதற்பாடல்கள் சிறப்பு மிக்கவையாகும் தமிழர்கள் காதலையும் வீரத்தையும் இரு கண்களாகப் போற்றினர். இப்பாடல்கள் சிறந்த கற்பனைப் பாங்கும், வர்ணணையும், கேலித்தன்மையும் கொண்டனவாக உள்ளன. தனது அன்புக் காதலியை வருணித்துத் தேர் பார்க்க வரும்படி ஆசையுடன் காதலன் அழைக்கிறான்.

'அன்ன நடையழகி
அலங்கார உடையழகி
பின்னல் நடையழகி – செல்லம்மா
புறப்படம்மா தேரு பார்க்க'

அதற்கு அவள்

'மதன வடிவழகா
மாமோகச் சொல்லழகா
வண்ண உருவழகா – என் ஆசை மச்சானே
வரமாட்டேன் தேரு பார்க்க'

என்று பாடுகிறாள்

'ஓடையிலே போற தண்ணி
தூசி விழும் தும்பி விழும்
வீ;ட்டுக்கு வாங்க மச்சான்
குளிர்ந்த தண்ணி நான் தாறேன்';

என்று காதலி காதலனை அழைத்துப்பாடும் பாடலும் உண்டு.

'குஞ்சி முகத்தழகி
கூர் விழுந்த மூக்கழகி
சாம்பல் குருத்தழகி - இப்ப
சாகிறண்டி ஒன்னால'

என்று காதலன் வேதனையில் பாடும் பாடலும் சிறப்புடையதாக உள்ளது.

தொழில் புரியும்போது பாடும் பாடல்கள் தொழிற் பாடல் வகையில் அடங்கும். தொழிலின் சுமையும் உழைப்பின் களைப்பும் தெரியாமல் இருக்க இத்தகைய பாடல்களைப் பாடுகின்றனர். மனிதர்கள் கூடித் தொழில் செய்யும்போது அக் கூட்டுறவிலே பிறப்பது தொழில் பாடல்களாகும். இவை விவசாயப் பாடல்கள், மீனவர் பாடல்கள் என பல வகைப்படும்.

நாற்று நடும்போது பாடப்படும் கீழ் வரும் தொழிற்பாடலில் காதல் உணர்வு மேலோங்கிக் காணப்படுகின்றது.

'நாலு மூலை வயலுக்குள்ளே
நாத்து நடும் குள்ளப் பெண்ணே
நாத்து நடும் கையாலே – என்னை
சேத்து நடலாகாதோ'

உழவு உழும்போது
'ஓடி நட கண்டே உறுதி உள்ள காலாலே – என்றும்
இந்த நடை நடந்து செல்லா
நாம் எப்போ போய்
கரை சேர்வோமடா'

என்றும் பாடுகின்ற பாடல்கள் எருதுக்கும், உழவனுக்கும் இடையிலான நெருங்கிய உறவை செல்லுகின்றன.

'புறப்படுவோமா மச்சான் புறப்படுவோமா
கட்டு வலை எடுத்துக்கிட்டு புறப்படுவோமா'
என்பன போன்ற பல மீன் பிடிப் பாடல்களும் உண்டு.

நீண்ட காலமாக வழங்கிவரும் கும்மிப்பாடல்கள், கோலாட்டப் பாடல்கள், வணக்கப் பாடல்களும் நாட்டார் பாடல்களில் அடங்கும். மனித வாழ்வின் இறுதி நிகழ்வாக அமையும் இறப்பை மையப்படுத்திய ஒப்பாரிப் பாடல்களும் நாட்டார் பாடல்களில் முக்கியமானவையாகும். இறந்தவர்களை நினைத்து அவர்கள் மீது பாடப்படும் பாடல்களே ஒப்பாரி என்பர். இறந்தவர்களின் இழப்பை எண்ணி இறந்தவர்களையும் தம்மையும் ஒப்பிட்டுப் பாடுவதும் ஒப்பாரியாகும். தாலாட்டும் ஒப்பாரியும் பெண் குலத்தின் படைப்பாகும். ஒரு பெண் தனது கணவனின் இறப்புக்குக் காரணமானவர்களைச் சொல்லிப் பின்வருமாறு புலம்புகிறாள்.

'தாலிக்கு அரும்பெடுத்த
தட்டானும் கண்குருடோ?
சேலைக்கு நூலெடுத்த
சேணியனும் கண்குருடோ?
பஞ்சாங்கம் பாக்க வந்த
பார்ப்பானும் கண்குருடோ?
எழுதினவன் தான் குருடோ?
எழுத்தாணி கூர் இல்லையோ?

சீராட்டிப் பாராட்டி வளர்த்த அருமை மகனை பிணக் கோலத்தில் பார்த்த தாய்

      'மணவறைப் பந்தலிலே – உன்
      மணக்கோலம் பாராமல்
      பிணவறைப் பந்தலிலே – நானும்
      பேரிழவே கொள்ளுகின்றேன்'
என்று பாடுகின்றாள்.

பொதுவாக நாட்டார் பாடல்கள் மண்ணோடு பிணைந்ததாக, மக்களின் உண்மையான வாழ்வை எடுத்துரைப்பனவாக உள்ளன. நவீன தொடர்பு சாதனங்கள் மேலைத் தேய கலாசார மோகம் என்பனவற்றின் காரணமாக மருவிக் கொண்டு வருகின்றன. சமூகத்தின் வரலாற்று மூலங்களை அறிவதற்கு நாட்டார் இலக்கியங்கள் அவசியமானவையென்பதனால் இவற்றைப் பாதுகாப்பது இன்றைய சமூகத்தினரின் தார்மிகக் கடமையாகும்.

 

தொகுப்பு:- த.மேகராசா(கவிஞர் மேரா), வலயக்கல்வி அலுவலகம், மட்டக்களப்பு.

Read 9248 times
Developed by
ICT Branch, Ministry of Education, Sri Lanka
Site Map | Disclaimer
Copyrights © 2012-2016 | ICT Branch, Ministry of Education, Sri Lanka